உலகத்தின் மாசுவின் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை சரி செய்ய எக்ஸ்னோரா அமைப்பையும், நாட்டின் மாசுவான இலஞ்சத்தை ஒழிக்க ஐந்தாவது தூண் அமைப்பையும் உருவாக்கிய M B நிர்மல் அவர்கள் தமிழ்மொழிக்கு ஏற்படும் மாசுகளை அகற்ற மற்றும் மொழியை பாதுகாக்க மொழி மொழி என்ற அமைப்பையும் உருவாக்கி உள்ளார்.

 

மொழி, "மொழி" அறிமுகம்

ம.பா.நிர்மல்

மொழி

"இலக்கணம், மொழி நூல் ஆகியவற்றுக்குப் பெரிதும் மேம்பட்டது, உயர்ந்தது, சிறந்தது "மொழி". ஓர் இனத்தின் மேதை, கலாச்சாரம், ஆகியவற்றின் கவிதாவாசகம், "மொழி"; அவற்றை உருவாக்கியுள்ள எண்ணங்கள், மொழியாக்கக்குறை, கற்பனைகள், ஆகியவற்றின் உயிருள்ள களஞ்சியம், "மொழி"
- ஜவஹர்லால் நேரு

மொழி புனிதமான ஒன்று; அது வாழ்க்கையிலிருந்து - வாழ்க்கையின் வேதனைகள், பரவசங்கள், அதன் தேவைகள், சோர்வுகள் ஆகியவற்றிலிருந்து - வளர்வது.  ஒவ்வொரு மொழியும்,  அதைப் பேசும் மக்களின் ஆன்மா எழுந்தருளியுள்ள ஆலயம்.
- ஆலிவர் வெண்டெல் ஹோல்ம்ஸ்
மொழியின் முக்கியத்துவம் குறித்த இரண்டு உலக மகா அறிஞர்களின் பொன் மொழிகளை மேலே படித்தீர்கள்.

நம் தாய் மொழியாம் தமிழைப் பற்றி பாட்டுக்கொரு புலவன் பாரதி என்ன கூறுகிறார்.

"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்"

பாட்டுக்கொரு புலவன் பாரதி, தமிழின் இனிமையை அழகாகக் கூறிவிட்டார். உலகிலேயே மொழிப்பற்று மிக்கவர்கள் தமிழர்கள்.  மொழிப்பற்றால் அவர்கள் ஜாதி, மத, பேதங்களை மறந்து ஒன்றுபடுவார்கள்.  மொழி அவர்களை ஒன்று சேர்க்கும் குடை. ஒட்ட வைக்கும் கோந்து.  சேர்த்துக் கட்டிப் போடும் கயிறு.

தமிழ்மொழியின் மிகச்சிறந்த இலக்கியவாதிகள், தமிழறிஞர்கள், தமிழ்மொழி வல்லுனர்கள் ஆகியோர் வாழ்ந்து வந்தாலும், அற்புதப் படைப்புகளை அள்ளித் தந்து கொண்டிருந்தாலும் தமிழ்மொழி இன்று தேய்ந்து வருகிறது, இளைத்து வருகிறது என்பதை நினைக்கும் போது வேதனையைத் தருகிறது.

மொழி, "மொழி"

இதோ மொழிச்சிதைவைத் தடுக்க மொழியின் சிறப்பை உயர்த்த ஒரு சிந்தனை, ஒரு மொழி சித்தாந்தம், ஒரு சேவை, ஒரு சிறு நூல், ஒரு இயக்கம் அதுவே மொழி, "மொழி".

இந்த இயக்கத்தின் பெயரின் முதல் சொல் மொழி, நம் மொழியாம் தமிழைக் குறிக்கிறது. (பெயர்ச் சொல்). இரண்டாவது சொல் "மொழி" தமிழ் மொழியில் பேசுவதைக் குறிக்கிறது. (வினைச் சொல்). ஆம், ஒருவரோடு ஒருவர் தமிழ்மொழியில் பேசுவதையே மொழி, "மொழி" என்ற பெயர் கூறுகிறது. 

மொழி, "மொழி" என்ற பெயருக்கு இன்னொரு பொருளும் இருக்கிறது. இருமுறை "மொழி" என்ற வார்த்தை கூறப்படுவதால் மொழியின் முக்கியத்துவத்தை குறிப்பிடுவதாக நினைக்கலாம். ஒரு "மொழி சுலோகம்" ஆக எண்ணலாம். ஒரு கோஷமாக (Slogan) பயன்படுத்தலாம். அதை ஒரு அறை கூவலாக எடுத்துக் கொள்ளலாம். தமிழன்னை நமக்கிடும் கட்டளையாகக் கருதலாம். வட சொல்லான பாஷைக்குத் தமிழ்ப் பெயர் "மொழி". பெயர் மட்டும் மொழியல்ல.  மொழியைப் பேசுவதும் (மொழிவதும்) மொழி. இது மற்ற மொழிகளுக்கு இல்லாத தமிழ் மொழிக்கு மட்டுமே உள்ள சிறப்பு. உதாரணமாக ஆங்கிலம் (English) என்பது மொழியின் பெயர். ஸ்பீக ்(Speak) என்றால் பேசுவதைக் குறிக்கும்.


"ழ"

உலகிலேயே இரண்டே மொழிகளில்தான் "ழ"கரம் உண்டு. ஒன்று தமிழ், இன்னொன்று மலையாளம். தமிழுக்குக் கூடுதல் சிறப்பு என்னவென்றால் மொழியின் பெயரிலேயே "ழ"கரம் இருக்கிறது. "ழ"கரத்தை மற்ற மொழிகளில் எளிதாக எழுதவோ, பேசவோ முடியாது. ஆங்கிலத்தில் "ழ"வை "ZHA" என்று குறிப்பிடுகிறார்கள்.  ஆனால் அதை உச்சரித்துப் பாருங்கள். "ழ" என்ற ஒலி வராது.  பல வெளிநாட்டுக்காரர்களால் "ழ"வை உச்சரிக்கவே முடியாது. ஆக கீழே காண்பது, "ழ"கரத்தை பயன்படுத்தியே அதுவும் வார்த்தைக்கு வார்த்தை "ழ"கரம் மணங்கமழ தமிழின் பெருமையை, சிறப்பினை ஓரளவிற்குக் கூறியிருக்கிறேன். 

தமிழ் வாழியவே
செம்மொழியான செந்தமிழில் செழுமை

அழகு தமிழில், பழகு தமிழில், குழுகுத் தமிழில், ஊழித் தமிழில், இயற்கைத் தமிழில், எழில் தமிழில், யாழ்த் தமிழில், இழையத் தமிழில், காழ்த் தமிழில், செழுமைத் தமிழில், மாழைத் தமிழில், ஒழுங்குத் தமிழில், பைந்தமிழில், செந்தமிழில், தீந்தமிழில், வாழும் நிலைத் தமிழில், மழலையின் மிழலையில், அழுவத் தமிழில், ஆழமான தமிழில், இழைந்து குழைந்து மொழிய, முழங்க, எழுத, இப்பழக்கங்களை வழக்கமாக்க, ஈழத்தமிழில் தமிழை முழுமையாக்க, தமிழை முழுமையாகத் தழுவ, நற்றமிழில் பழக, தமிழ் எப்பொழுதும் புழங்க, தமிழ் தழைக்க, தமிழ் கொழிக்க, தமிழர்கள் தமிழால் நெகிழ, மகிழ, தமிழர்களின் விழிப்புணர்வுடன் தமிழுக்காக தமிழால் தமிழர் எழுச்சியுற, மகிழ்ச்சியுற, செழிப்புற, தமிழர்களையும், தமிழரல்லாதவர்களையும், உழைப்பாளர்களையும் தோழமையுடன், கெழுந்தகமையுடன் உழவலன்புடன், அழைத்து, இழுத்து, பழகி தமிழுக்காக உழைத்து, நூழை வழியாக தமிழுடன் நுழைந்து, பூழை வழியாக தமிழுடன் நுழைந்து, தமிழ் இமிழ் எழுப்பி, தமிழ் நிழலில், தமிழ் சூழ்ந்த வாழ்க்கையில் ஒழிவின்றி முழுக்க வாழ்ந்து, அழிவிலிருந்து தமிழ் பிழைக்க, பிழையற்ற, பீழையற்ற, பாழாக்கப்படாத, வீழ்ச்சியடையாத, ஏழ்மையற்ற, தமிழை மழையாக ஒழிவின்றிப் பொழிந்து, நிகழ்காலத் தமிழின் விழுதுகளாகத் திகழும் தமிழைத் தொழுவோம், தமிழை வழிபடுவோம், கொழு கொம்புகளாக, தமிழை வாழ்த்துவோம், தமிழாக வாழ்வோம், தமிழில் மொழிவோம், முழுக்க குழுவாக ஊழியம் வழங்கிட வழிகாட்டிடுவோம், தமிழைப் புகழ்வோம், மகிழ்ந்து குழலூதுவோம்,

பின்குறிப்பு: தமிழ் மொழி என்ற பெயரின் அழகே "ழ"கரம்தான். தமிழ் என்று அழைப்பதை விட்டுவிட்டு "டமில்" என்றழைப்பது சரியா? தமிழர்களா? அல்லது டமிலர்களா?

 

 

 
Powered by FFMedias