உலகத்தின் மாசுவின் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை சரி செய்ய எக்ஸ்னோரா அமைப்பையும், நாட்டின் மாசுவான இலஞ்சத்தை ஒழிக்க ஐந்தாவது தூண் அமைப்பையும் உருவாக்கிய M B நிர்மல் அவர்கள் தமிழ்மொழிக்கு ஏற்படும் மாசுகளை அகற்ற மற்றும் மொழியை பாதுகாக்க மொழி மொழி என்ற அமைப்பையும் உருவாக்கி உள்ளார்.

 

மொழி, "மொழி"யின் இலட்சியம் மற்றும் இலக்கு

 

"செம்மொழி செந்தமிழைப் போற்றுவது, பாதுகாப்பது மற்றும் வளர்ப்பது".

மொழி "மொழி" கொள்கைகள்; செயல் திட்டங்கள் மற்றும் மொழி சேவைகள்

  1. வீட்டு மொழி தமிழ், பேச்சு மொழி தமிழ்.
  2. பழகு தமிழ், அழகு தமிழ்
  3. பண்புத் தமிழ், நன்று தமிழ்
  4. மொழி வளம் சேர்த்தல், மொழி நலம் காத்தல்

நாற்காலிக்கு நான்கு கால்கள்.  மொழி "மொழி" இயக்கதிற்கும் நான்கு கால்கள் உண்டு. மேலே கூறப்பட்ட 'நான்கு-வழி' மொழி சேவைகளை எவரும் செய்ய, இந்த இலட்சியங்கள் உயிர் பெற, மொழி..."மொழி" அமைப்பின் கிளைகளைப் பட்டணங்களிலும், கிராமங்களிலும், கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும், தொழிற்சாலைகளிலும் உருவாக்குதல் அவசியம்.  மொழி...."மொழி" கிளைகள் மூலம் மக்களை மொழி சேவை செய்திட வைக்க இடைவிடாது பணியாற்றுவது முக்கியமாகும். மொழி..."மொழி" கிளைகள் அயல்நாடுகளில் தமிழர்களால் உருவாக்கப்படுவது என்பது  உடனடியாக செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். உலகமெங்கும் மொழி......மொழி கிளைகள் மூலம் உலகத் தமிழர்கள் ஒன்று சேருவார்கள். 

"வீட்டு மொழி, பேச்சு மொழி"
இந்த சிந்தனைப் பொறி உண்டாக்கியதன் பின்னணி

எனக்கு மீள முடியாத அதிர்ச்சியைத் தந்த சில நிகழ்வுகள் சம்பவங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் இங்கே விளக்கப்பட்டுள்ளன.  இவைகளே மொழி.. "மொழி" இயக்கம் தோன்றுவதற்கான பொறிகள்.

"எங்களுக்கு 'டமில்' தெரியாது"

சில ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு அயல்நாட்டு அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று பல சுற்றுச்சூழல் கூட்டங்களில் ஆங்கிலத்தில் பேசிய எனக்கு, என் தாய்மொழியான தமிழில் பேச வாய்ப்பேற்படாமல் போனது வருத்தத்தை உண்டாக்கியது. இதற்காக ஏங்கிக் கொண்டிருந்த எனக்கு, ஓர் இன்ப அதிர்ச்சியாக அந்நாட்டுத் தமிழ்ச்சங்கம் ஒன்று அன்போடு என்னைப் பேச அழைத்தது. அரங்கில் கூட்டம் நிரம்பி வழிந்தது. "கோட்டு", "டை"யுடன் பெரிய கார்களில் தமிழர்கள் வந்து இறங்குவதைப் பார்த்த போது என்னுடைய மகிழ்ச்சி பன்மடங்காகியது. மறந்துபோன பழமொழியான "திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" என்பதை உயிர்ப்பித்துக் கொண்டிருந்த அயல்நாட்டு வாழ் தமிழர்களைக் கண்ட போது, என் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடியது. 

அந்தக் கூட்டத்தில், பல கலை நிகழ்ச்சிகள் நடக்க இருந்ததால் கூட்டத்தின் தொடக்கத்திலேயே நான் பேச அழைக்கப்பட்டேன். "அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! இந்த நாட்டில் தங்கி, நன்னிலை பெற்ற என் அருமைத் தமிழன்பர்களே!" எனப் பேசத் தொடங்கியவுடன் முன் வரிசையில் உட்கார்ந்திருந்த அந்நாட்டில் வாழும் தமிழர்களின் தமிழ்க் குழந்தைகள் எழுந்து "தமிழில் பேசாதீர்கள், ஆங்கிலத்தில் பேசுங்கள்" என்று ஆங்கிலத்தில் குரல் கொடுத்தனர். (Don't Talk in Tamil.  We don't know Tamil.  Speak in English) இதைக் கேட்டவுடன் நான் அதிர்ச்சியடைந்தேன். அந்தக் கூட்டத்தில் நான் உடனே சொன்னேன், "நாட்டு மொழி தமிழென்று வாதிட்டார்" பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகிய தமிழ்மொழித் தலைவர்கள், "மாநில மொழி தமிழ்" என்று போராட்டம் நடத்தினார் மறைந்த மாமனிதர் மா.பொ.சி. அவர்கள். இந்த ஒன்றும் தெரியாத நிர்மல் கூறுகிறேன், "வீட்டு மொழி தமிழ், பேச்சு மொழி தமிழ்". "ஒரு தமிழர் இன்னொரு தமிழருடன் தமிழிலேயே பேச வேண்டும்" என்ற எனது வேண்டுகோளை வெளிநாட்டு தமிழர் முன் வைத்தேன். என் வேண்டுகோள் அக்கூட்டத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தமிழை அறவே தவிர்த்த தமிழ் மக்கள்

இன்னொரு நாட்டில் நான் கலந்து கொண்ட தமிழ்ச் சங்கக்கூட்டத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும், சொற்பொழிவுகளும் ஆங்கிலத்திலேயே நடைபெற்றன. அந்நாட்டில் வாழும் தமிழர்கள் ஒன்று கூடுவதற்கும், பண்டிகைகள் கொண்டாடுவதற்கும் மட்டுமே அந்தத் தமிழ்ச்சங்கம் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. அந்தச் சங்கத்தின் பெயரில் மட்டும் தமிழ் ஏனோ ஒட்டிக் கொண்டிருந்தது. அங்கு காணாமல் போயிருந்தது "தமிழ்" மட்டுமே.

பாசத்திற்குக் குறுக்கே அன்னிய மொழி

மற்றொரு நிகழ்ச்சி, தமிழ்நாட்டில் பிறந்த எனக்குத் தெரிந்த ஒருவர் தமிழ்ப் பெண்ணைக் கரம் பிடித்து இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் அயல்நாட்டில் குடியேறினார். பத்தாண்டு காலம் கழித்து அத்தம்பதியருக்கு அங்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. நான்காண்டு காலம் கழித்து அந்தத் தமிழரின் தாயார் அயல்நாட்டிலுள்ள தன் தமிழ்ப் பேரனை முதன்முதலாகப் பார்க்க ஆவலோடு, பாசம் பொங்கச் சென்றார். அந்த அம்மையாருக்குக் காத்திருந்தது ஓர் பேரதிர்ச்சி. பேரனைக் கண்டு பேருவகை அடைந்த அவரால் தன் பேரனுடன் பேச முடியவில்லை. ஏனென்றால் அந்தத் தமிழ்ப் பேரனுக்குத் தாய்மொழி தமிழ்மொழி துளியும் தெரியவில்லை. பேரன் பேசும் ஆங்கில மொழியோ பாட்டிக்குச் சிறிதும் புரியவில்லை. நாட்டிலே ஆட்டிப்படைக்கும் மொழிப் பிரச்சினை வீட்டிலேயே வந்துவிட்டது. பாட்டியால் பேரனுடன் பேச முடியாமல், முகபாவத்தாலேயே தன் பாசத்தை வெளிப்படுத்தினார்.

இதற்குக் காரணம் என்ன தெரியுமா? தமிழகத்தில் பிறந்து, தமிழ் மொழியைத் தாய் மொழியாகப் பெற்று, தமிழ் மூலம் கல்வி கற்று, நண்பர்களுடன் தமிழில் பேசி, விளையாடி, தமிழ்த் திரைப்படங்கள் பார்த்து, மகிழ்ந்து, தமிழ் நாட்டில் வளர்ந்து, தமிழ் நாட்டில் வளர்க்கப்பட்டு, தமிழ்நாட்டுப் பெண்ணை மணந்து அயல்நாட்டுக்குச் சென்ற தமிழர், தமிழை அடியோடு மறந்ததே. அவரும், அவர் துணைவியாரும் வீட்டில் ஒருவருடன் ஒருவர் ஆங்கிலத்திலேயே பேசி வந்ததோடு மட்டுமல்ல, தங்கள் குழந்தையிடமும் ஆங்கிலத்தில் பேசி வந்ததே, பேரனும் பாட்டியும் ஒருவருடன் ஒருவர் பேச முடியாமல் போனதற்குக் காரணம். 

தாய் மொழியை மறந்த தமிழர்

அயல்நாட்டுவாழ் தமிழர் ஒருவர் ஒருமுறை என்னிடம் கூறினார், "நான் தமிழ்நாட்டில் பள்ளிக்கூடத்தில் தமிழ்மொழி வழியில்தான் கல்வி பெற்றேன். அயல்நாட்டில் பல ஆண்டுகாலமாக இருந்ததால் தமிழ் படிக்கும் வழக்கம் போய்விட்டது. தமிழில் படிக்க மறந்துவிட்டது. தமிழில் பேசுவது விட்டுப் போய்விட்டது" என்று "நளினமான" ஆங்கிலத்தில் சொன்னார். அவர் பேசிய ஆங்கிலம் அவருடைய மேல்நாட்டு ஆங்கில உச்சரிப்பு காரணமாக எனக்குப் புரியவில்லை. தான் புகுந்த நாட்டில் அந்நாட்டு மக்கள் எப்படி ஆங்கிலத்தில் "வசிகரமாக" உச்சரிப்பார்களோ. அது போன்றே பேசினார். ஆனால் பிறந்த நாட்டில் பேசிய தமிழை, தாய்ப்பாலோடு ஊட்டப்பட்ட தாய்த் தமிழை, தன்னை வளர்த்த தமிழை அறவே ஒதுக்கிவிட்டார். தன் தாயுடன் பேசிய தன்னுடைய தாய் மொழி தமிழுக்கு, ஒரேடியாக முழுக்குப் போட்டுவிட்டார். தமிழைத் தலை முழுகிவிட்டார். தொப்புள் கொடி உறவைத் தொலைத்துவிட்டார். அவருடைய முதல் மொழியான தமிழ், கடை மொழியாகி கடைசியில் காணாமலே போய்விட்டது. ஆங்கில மொழியை நுனி நாக்கில் பேசினார். தமிழை உதட்டளவில் கூட பேசவில்லை.


வழக்கொழிந்த மொழியான தமிழ்

நான் வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்த போது தென்னாப்பிரிக்காவிலிருந்து சில இளைஞர்கள் என்னைச் சந்திக்க வந்திருந்தனர். ஒருவர் பெயர் தமிழ்ச்செல்வன், மற்றொருவர் பெயர் கலையழகன். ஒரு பெண்ணின் பெயர் மலர்விழி. இவர்களுக்குள் ஓர் ஒற்றுமை. அழகிய தமிழ்ப் பெயர்களைக் கொண்டிருந்த மூவருக்குமே தமிழ் சிறிதளவும் தெரியாது. அழகான ஆங்கிலத்தில் உரையாடினர்கள்.  ஆனால் தாங்கள் தமிழர்கள் என்ற பெருமை அவர்களுக்கு இருந்தது. ஆகவேதான் அவர்களுடைய பெற்றோர்கள் தமிழ்ப் பெயர்களைச் சூட்டியிருந்தார்கள். ஒன்பது தலைமுறையாகத் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்து வந்ததால், தமிழ்மொழி பேச அவர்களுக்கு வாய்ப்பில்லை, தேவையிருக்கவில்லை. ஆகவே, அவர்களைப் பொறுத்தவரை தமிழ்மொழி அவர்கள் குடும்பங்களில் வழக்கொழிந்த மொழியாகிவிட்டது.

பெருமைப்பட்ட அம்மா

ஒரு வீட்டிற்கு எக்ஸ்னோரா இயக்கத்தின் ஒரு தமிழ் வெளியீட்டை எடுத்துச் சென்றேன்.  குடும்பத்தலைவர் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.  அவருடைய பதினைந்து வயது மகன் அங்கு வந்தான்.  "இது என்ன நூல்" என்றான். ஒரு இதழைக் கொடுத்துப் 'படி" என்றேன்.  அவன் உதட்டைப் பிதுக்கினான். உடனே அவனுடைய அம்மா பெருமை பொங்க "அவன் படிப்பது இங்கிலீஷ் மீடியம், தமிழ் அவனுக்குப் படிக்கத் தெரியாது" என்றார். தாய்மொழி தன் மகனுக்குத் தெரியாது என்று தாயே சொன்ன போது அதையும் ஒரு சாதனை போன்று சொல்லிய போது நம் தாய் மொழியான தமிழின் எதிர்காலம் பற்றி என் மனம் கவலை கொள்ள ஆரம்பித்தது.  "அம்மா" என்றது மாடு.  "மம்மி" என்கிறது தமிழ் நாட்டுக் குழந்தைகள். எகிப்து நாட்டில் நாம் காணும் மம்மிகளை பற்றி இங்கு கூறுவது இங்கிதமாக இருக்காது.
இதே போன்று இன்னொரு நிகழ்ச்சி

ஒரு வீட்டுக்குச் சென்றிருந்தேன். வீட்டின் தலைவி தன்னுடைய ஐந்து வயது குழந்தையைப் பார்த்து, "மாமா வந்திருக்காங்க, பள்ளிக்கூடத்தில் என்ன சொல்லிக் கொடுத்தாங்க சொல்லு பார்க்கலாம்" என்றார். அந்தக் குழந்தை "பா....பா பிளாக் ஷிப்" என்று பாடியது.  நான் தாயைப் பார்த்து கேட்டேன்.  "நிலா நிலா ஓடி வா", "கைவீசம்மா கைவீசு", "சாயந்தாடம்மா, சாயந்தாடு" இவையெல்லாம் குழந்தைக்குத் தெரியாதா?" என்று. அந்தத் தாயோ மகிழ்ச்சியுடன் "என் குழந்தை இங்கிலிஷ் மீடியம் ஸ்கூலில் படிக்கின்றது" என்றார். தமிழ் தாய்மொழி ஆனால் தாயே தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணரவில்லை. தாயே இப்படி இருந்தால், எதிர்காலத்தில் தாய்மொழியின் நிலை எப்படியிருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள்.

தமிழ்மொழியைத் தமிழர்களே மறக்கலாமா?

ஒருமுறை நான் "வீட்டு மொழி....பேச்சு மொழி" என்ற என் இலட்சியத்தைப் பற்றி ஒரு தமிழ் தொழிலதிபரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.  உணர்ச்சிவசப்பட்ட அவர், "தமிழர்களிடம் மொழிப்பற்று போய்விட்டது. மொழி இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படுவதற்குத் தமிழர்களே காரணம்" என்றார். உடனே எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. காரணம் ஆவேசத்துடன் அவர் அப்படி என்னிடம் கூறியது ஆங்கிலத்தில். ("Tamils have lost love for their mother tongue, it is a shame").

 
உள்ளூரிலே தமிழ்படும் பாடு

சென்னையில் ஒரு ஆங்கிலம் அறியாதவர்களின் கூட்டம். கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோனர் உழைத்து வாழும் தொழிலாளர்கள். ஒரு படித்த தமிழர் அந்தக் கூட்டத்தில் உரையாற்றினார். "சாரி டமிலில் என்னால் அவ்வளவாக ஸ்பீக் பண்ண முடியாது. இங்கிலிஷில் நான் ஸ்பீக் பண்ணினால் உங்களுக்கு அண்டர்ஸ்டாண்ட் ஆகாது" என்றார். நான் எழுந்து கையெடுத்து அவரைக் கும்பிட்டு "நீங்கள் தப்பித் தவறி கூடத் தமிழில் பேச வேண்டாம்.  ஆங்கிலத்திலேயே பேசித் தொலையுங்கள்" என்றேன். தமிழ் மொழியில் தப்பித்தவறி பேசிவிடுவாரோ என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டது.


'தங்கிளிஷ்'

இன்னொரு கூட்டத்தில் இன்னொரு சொற்பொழிவாளர் "சாரி எனக்கு டமில் வராது. வேண்டுமென்றால் டமில் இங்கிலிஷ் இரண்டையும் மிக்ஸ் பண்ணி தங்கிளிஷில் ஸ்பீக் பண்றேன்" என்றாரே பார்க்கலாம். தங்கிளிஷ் என்ற வார்த்தையின் விளக்கம் தமிழ் + இங்கிலிஷ். தமிழைக் காப்பாற்றத் தவறிய தமிழர்கள் சிலர் "தங்களிஷ்" என்ற புதிய மொழியை உருவாக்கி, புதிய வரலாறு படைத்துவிட்டார்கள்.

தமிழர்களிடம் தமிழில் பேசக்கூடாதா?

சென்னையில் ஒரு கூட்டம். அக்கூட்டத்தில் பலர் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டிருந்தனர். மனைவி மக்களோடு வந்திருந்தனர். அங்கு பேசிய ஏழு பேச்சாளர்களில் நானும் ஒருவன். கூட்ட ஏற்பாட்டாளர் கூட்டத் துவக்கத்திலேயே திட்டவட்டமாக அறிவித்துவிட்டார், கூட்டத்தின் மொழி ஆங்கிலம், ஆங்கிலம் மட்டுமே என்று.  அனைவரும் ஆங்கிலத்திலேயே பேச வேண்டும் என்று கண்டிப்புடன் கூறிவிட்டார். மற்ற ஆறு பேர்களும் ஆங்கிலத்திலேயே தங்கள் உரையை முடித்த பிறகு, கடைசியாகப் பேச நான் அழைக்கப்பட்டேன். என் உரையைத் துவக்குவதற்கு முன் பார்வையாளர்களைப் பார்த்து ஆங்கிலத்தில் ஒரு கேள்வி கேட்டேன், அங்கு எவ்வளவு பேருக்குத் தமிழ் தெரியாது என்று. கிட்டத்தட்ட இருநூறு பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் யாருக்கெல்லாம் தமிழ் தெரியாது என்று ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒரே ஒருவர் மட்டும் கையைத் தூக்கினார். அதாவது கூட்டத்தில் அவருக்கு மட்டுமே தமிழ் தெரியாது. பிறகு தமிழில் கேட்டேன், "எவ்வளவு பேருக்கு இங்கே ஆங்கிலம் தெரியாது" என்று. பெண்கள் உட்பட முப்பது பேர்கள் கையைத் தூக்கினார்கள். எனக்கு முன்னால் பேசிய ஆறு பேச்சாளர்களின் சிறப்பான உரை அருமையான கருத்துக்கள் முப்பது பேரைச் சென்றடையவில்லை என்று எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. இதில் ஒரு கொடுமை என்னவென்றால் எனக்கு முன்னால் பேசிய ஆறு பேச்சாளர்களில் ஐவர் தமிழர்கள். தமிழ் மொழியை முழுமையாக அறிந்தவர்கள்.

நான் ஆங்கிலத்தில் அந்த தமிழ் தெரியாத ஒருவரைப் பார்த்துக் கூறினேன், என் உரை தமிழில்தான் இருக்கும், கூட்டம் முடிந்த பிறகு என் உரையின் சுருக்கத்தை அவர் ஆங்கிலத்தில் பெறலாம் என்று அன்புடன் தெரிவித்தேன். நான் பேசும் போது நீங்கள் பக்கத்தில் அமர்ந்திருப்பவர்களிடம் என் பேச்சின் ஆங்கில மொழி பெயர்ப்பை அவ்வப்போது அவர் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறி என் உரையைத் தமிழிலேயே நிகழ்த்தினேன். இவ்வழக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்கிறேன். நீங்களும் கடைப்பிடிக்கலாமே!. அன்று தமிழ் தெரியாத ஒருவருக்காக ஆங்கிலம் அறியாத முப்பது பேர்களின் மூன்று மணி நேரம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளராலும், ஆறு சொற்பொழிவாளர்களாலும் வீணடிக்கப்பட்டது.

தமிழ் அறியாதவர்களின் எண்ணிக்கை கணிசமாக இருந்தால் சரி. இல்லையென்றால் தமிழ்நாட்டில் கூட்டங்களின் மொழி தமிழாக மட்டுமே இருக்க வேண்டும். பங்கேற்கும் பொது மக்கள் இதைக் கூட்டத் தொடக்கத்திலேயே வலியுறுத்த வேண்டும். ஆங்கில மொழிப் புலமையைக் காட்டுவது கூட்டத்தின் குறிக்கோள் என்றால், அப்படிப்பட்ட கூட்டங்கள் ஆங்கிலத்தில் நிகழ்த்தப்படலாம். இன்னொன்று; உங்கள் தாய் மொழியும், கேட்பவர்களின் தாய்மொழியும் ஒரே மொழியாகிவிட்டால், தாய்மொழியில் பேசுவதுதான் பெரும் நன்மை பயக்கும். தாய்மொழியில் பேசும் போது வார்த்தைகள் இதயத்திலிருந்து புறப்படும். வேற்று மொழியென்றால், வார்த்தைகள் தமிழில் இதயத்தில் உருவாக்கப்பட்டு மனதில் சென்று வேற்று மொழியில் பெயர்க்கப்பட்டு பிறகு வெளிவரும். இதயத்திலிருந்து கூறப்படுபவை கேட்பவரின் இதயத்தையே சென்றடையும். மனதிலிருந்து உருவாகும். வார்த்தைகள் கேட்பவரின் மனதையே சென்று அடையும். தமிழ் தெரியாதவர்கள் அக்கூட்டத்திலிருந்தால், ஒருவர் தமிழிலும், இன்னொருவர் ஆங்கிலத்திலும் உரையாற்றலாம்.

உங்களுக்கும் இது போன்ற அனுபவங்கள் நிச்சயம் ஏற்பட்டிருக்கும். அவற்றை தயவு செய்து எழுதி அனுப்பவும்.  இந்நூலின் அடுத்த பதிப்பில் உங்கள் பெயருடன் வெளியிட உதவும்.

 
அனைவரும் உடனடியாகச் செயலாக்கம் தரவேண்டிய மொழிச் சேவை

மேலே சொன்ன நிகழ்ச்சிகளின் பின்னணியில் அனைத்துத் தமிழர்களும் தமிழ் மொழிக்கு ஒரு சிறிய சேவை செய்ய வேண்டும். அந்த சேவையின் பெயர் "வீட்டு மொழி தமிழ், பேச்சு மொழி தமிழ்". வீட்டிலேயே தமிழ்க் குடும்பத்தினர் அனைவரும் தமிழ் மொழியிலேயே பேச வேண்டும்; கூடியவரை நல்ல தமிழில், இனிய தமிழில் பேச வேண்டும்.

 

 

 
Powered by FFMedias