உலகத்தின் மாசுவின் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை சரி செய்ய எக்ஸ்னோரா அமைப்பையும், நாட்டின் மாசுவான இலஞ்சத்தை ஒழிக்க ஐந்தாவது தூண் அமைப்பையும் உருவாக்கிய M B நிர்மல் அவர்கள் தமிழ்மொழிக்கு ஏற்படும் மாசுகளை அகற்ற மற்றும் மொழியை பாதுகாக்க மொழி மொழி என்ற அமைப்பையும் உருவாக்கி உள்ளார்.

 

மொழிச் சேவை ஒன்று

"வீட்டு மொழி தமிழ்", "பேச்சு மொழி தமிழ்"!
(மிக முக்கிய செயல்திட்டம்)

தமிழர்கள் தமிழர்களிடமும், தமிழறிந்த, தமிழ்நாட்டில் வாழ்ந்த பிறமொழியினரிடமும் தமிழிலேயே பேச வேண்டும். எந்த நாட்டிலும் தமிழர்கள் குடியேறலாம். எந்தப் பணியையும் அவர்கள் செய்யலாம். எந்த மொழியையும் கற்றுக் கொள்ளலாம். அம்மொழிகளில் புலமையும் பெறலாம். அம்மொழிகளில் அம்மொழிக்காரர்களிடம் பேசலாம். அம்மொழியில் அந்நாட்டுக்காரர்களே வியக்கும் வகையில் அவர்களைவிட சிறப்பாகப் பேசலாம். தமிழ் தெரியாதவர்களிடம் ஆங்கிலத்தில் உரையாடலாம். ஆனால், வீட்டிலும் தமிழர்களிடமும், தமிழ்மொழியறிந்த மற்ற மொழிக்காரர்களிடமும் தம் தாய்மொழியாம் தமிழிலேயே தமிழர்கள் பேச வேண்டும். மலையாள மொழியினர் ஒருவரோடு ஒருவர் மலையாளத்தில் மட்டுமே பேசுவார்கள். என்னிடம் மிக உயர்கல்வி பெற்ற இரு மலையாள மொழியைத் தாய்மொழியாகப் பெற்றவர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். தமிழ் தெரியாத அவர்கள் என்னுடன் நல்ல ஆங்கிலத்தில் பேசுவார்கள். நான் அவர்களை விட்டுச் சற்றுத் தள்ளிப் போனால் இருவரும் தங்கள் தாய்மொழி மலையாளத்தில் பேச ஆரம்பித்து விடுவார்கள். அது அவர்கள் மொழிப்பற்று. அதேபோன்று தெலுங்கு மொழியினரும் தங்கள் தாய்மொழியிலேயே பேசுகிறார்கள். இந்தி மொழியாளர்களின் மொழிப்பற்றைச் சொல்லவே தேவையில்லை. தாய்மொழியை இவர்கள் அனைவரும் என்றும் எப்போதும் எந்த இடத்திலும் இமியளவும் விட்டுக் கொடுப்பதில்லை. இதுபோல் தமிழர்களும் தாயைப் பேணிக்காப்பது போல், தமிழ்த் தாயைக் காத்திட வேண்டும். கண்ணை இமை காப்பது போல் மொழியைக் காத்திட வேண்டும்.

குறிப்பாக, அயல்நாட்டில் வாழும் தமிழர்கள் இல்லங்களில் தமிழ் மணம் கமழ, தொப்புள் கொடி உறவு தொடர்ந்திட, அறுந்து போய்விடாமல் காக்க "வீட்டு மொழி மற்றும் பேச்சு மொழி"யாகத் தமிழ் திகழ மொழி......"மொழி" என்ற இவ்வியக்கம் முயற்சிகள் மேற்கொள்ளும்.

எச்சரிக்கை

தமிழ் 'வீட்டு மொழி'யாக இல்லாமல் போய்விட்டால், அது ஒரு நாள் 'நாட்டு மொழி' என்ற நிலையையும் இழந்துவிடும். 'பேச்சு மொழி'யாகத் திகழாவிட்டால் "மொழி போச்சு" என்று கூற வேண்டிய நிலை வரும். 

மொழி, "மொழி" என்ற இயக்கம் உலகமெங்கும் வாழும் தமிழர்களிடையே அதன் முதன் இலக்கான "வீட்டு மொழி தமிழ், பேச்சு மொழி தமிழ்", நடவடிக்கைக்கு முழு செயல்வடிவம் தரும். முழு மூச்சுடன் இறங்கும். மிக முக்கிய கொள்கையாகக் கருதும்.  மொழிச் சேவையாக எண்ணிச் செயல்படும்.

நான்கு வகைத் தமிழர்கள்

தமிழ் மொழியை வீட்டு மொழியாக வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படை இலட்சியத்திற்கு இன்னும் பல காரணங்களைக் கூறலாம்.  உலகத் தமிழர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். முதலாவது வகை தமிழ் மண்ணிலே உதித்தவர்கள்.  அவர்கள் வாழும் நாடு அவர்களின் சொந்த நாடு.  இரண்டாவது வகையில் இடம் பெறுபவர்கள், சில நூறு ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் நாட்டிலிருந்து சென்று அயல்நாட்டில் குடியேறிய தமிழர்கள். மூன்றாவது வகை, ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் இங்கிருந்து அங்கு சென்றவர்கள், நான்காவது வகை அண்மையில் சென்றவர்கள்.

முதல் வகை: தமிழ் மண்ணில் அங்கேயே உதித்தவர்கள்; இப்பிரிவில் இரண்டு நாட்டினர் இருக்கின்றனர். தமிழ் நாட்டுத் தமிழர்கள் மற்றும் யாழ்ப்பாணத் தமிழர்கள். அவர்கள் சொந்த மண்ணே அதுதான். இவர்கள் தமிழை கைவிட்டுவிடுவதில்லை. இவர்களின் பெரும்பாலானோர் தமிழைப் போற்றி தமிழ் மீது உயிரையே வைத்திருக்கிறார்கள்.  தமிழ் உணர்வை முழுக்கக் கொண்டுள்ளார்கள்.

இரண்டாவது வகை: சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டிலிருந்து அயல்நாட்டிற்குச் சென்றவர்கள்; கடந்த பல ஆண்டுகளாக தென் ஆப்பிரிக்கா, பிஜி போன்ற நாடுகளில் குடியேறியவர்கள்; விவசாயம் போன்ற தொழிலுக்காக இவர்கள் வெளித் தொடர்பிற்குத் தமிழ் தேவையின்மையால் தமிழைப் பயன்படுத்துவதை விட்டுவிட்டனர். எனவே இவர்களுடைய இன்றைய சந்ததியினர் பெயரில் மட்டும் தமிழ் வைத்திருக்கின்றனர். உதாரணம், தென் ஆப்பிரிக்கா மற்றும் பிஜி தீவு. 

மூன்றாவது வகை: குறைந்தது நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வெளிநாட்டுக்குச் சென்ற தமிழர்கள்.  இவர்கள் இல்லங்களில் தமிழ் வெகுவாக மறைந்துவிட்டது அல்லது மறைந்து வருகிறது. இந்த வகையைச் சார்ந்த வெளிநாட்டுத் தமிழர்கள், தமிழ் மொழியைப் பெரிதும் விரும்பினாலும், தமிழ் ஒரு சில காரணங்களுக்காக அவர்கள் வீட்டை விட்டு மெல்ல வெளியே அனுப்பப்பட்டு வருகிறது. அவர்கள் குடியேறும் நாடுகளில் வருமானம் ஈட்ட வேண்டும் என்றால், வெற்றிகரமாக வாழ்க்கை நடத்த வேண்டும் என்றால் அவர்கள் பல்வேறு மொழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டிய கடுமையான கட்டாயத்தில் இருக்கிறார்கள். குடியேறிய நாடு ஆங்கில மொழி நாடாக இருந்தால் ஆங்கில மொழி மட்டும் கற்றுக் கொண்டால் போதும். பல ஆப்பிரிக்க நாடுகளில் குடியேறிய தமிழர்கள் ஏதாவது ஒரு ஐரோப்பிய மொழியையும், உள்நாட்டு மொழியையும், ஆங்கில மொழியையும் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியத்தில் இருந்தார்கள். எத்தனை மொழிகள்தான் பேசுவது. எத்தனை மொழிகள்தான் கற்றுக் கொள்வது மற்றும் நினைவில் வைத்துக் கொள்வது. தங்கள் வாழ்க்கையே பிரச்சினையாக இருக்கும் போது, உணவளிக்கும் மொழிக்குத்தானே முக்கியத்துவம் கொடுக்க முடியும். அவர்கள் குழந்தைகள் செல்லும் பள்ளிகளிலோ, அவர்கள் கல்வி கற்கும் மொழி நிச்சயம் தமிழாக இருக்காது. அது வேறு மொழியாகத்தான் இருக்கும்.

உதாரணமாக மலேசியாவை எடுத்துக் கொண்டால் அங்கு பெரும்பாலான பள்ளிகளில் பாடங்கள் அனைத்தும் மலாய் மொழியில்தான் இருக்கும். தமிழ்மொழி வழி பள்ளிகள் இருந்தாலும் எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ளும் போது மலாய் மொழி வழிப் பள்ளிகளே போட்டியில் வெற்றி பெறுகின்றன. அந்நாட்டில் வியாபாரம் பெருமளவில் சீனர்கள் கைகளில் இருக்கிறது. அதனால் மலேசிய தமிழர்கள் சீன மொழியையும் கற்றுத் கொள்ள வேண்டும். வேலை வாய்ப்புகள் பெற வேண்டுமென்றால் ஆங்கில அறிவு அவசியம் தேவை. எனவே ஒவ்வொரு தமிழ் மாணவன் முன்பும் பல மொழிகள் போட்டி போடுகின்றன. அவனை முழுக் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. எனவே தாய்மொழியைவிட 'வயிற்று மொழி' முக்கியத்துவம் பெறுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இந்நிலையில் தமிழின் முக்கியத்துவம் குறைந்துவிடுவது இயற்கையான ஒன்றே. மலேசியா நாட்டைப் பொறுத்தவரை அங்கே வாழும் தமிழர்களிடையே தமிழ் ஆர்வம் மிகுந்து காணப்படுகிறது. ஆனால் ஏராளமான தமிழ்க் குழந்தைகளைப் பொறுத்தவரை, அவர்களால் தமிழில் பேசத்தான் முடியும். எழுதவோ, படிக்கவோ முடியாது. இது போன்ற சூழ்நிலையில் அந்நாட்டில் வசிக்கும் தமிழர்களை விட்டுத் தமிழ் விலகாமலிருக்க வேண்டுமென்றால், அவர்கள் உடனடியாகத் தமிழை வீட்டு மொழியாக்க வேண்டும். அந்நாட்டில் மொழி..."மொழி" இயக்கத்தை உடனடியாகத் துவக்கி இந்த இலட்சியத்தைப் பரப்ப வேண்டும்.

நான்காவது வகை: அண்மைக் காலத்தில் வேலைக்காக அமெரிக்கா போன்ற வெளி நாட்டிற்குச் சென்றவர்கள்.  இவர்கள்தான் மருத்துவம், பொறியியல், கல்லூரி ஆசிரியர் பணிக்காக அயல்நாடு சென்றவர்கள்.  இவர்கள் தமது நுண்ணறிவு மூலம் இன்று வெளிநாடுகளில் கொடி கட்டிப்பறந்து நன்கு சம்பாத்திக்கிறார்கள். இவர்களின் சம்பாத்தியத்திற்கு அவர்கள் வாழும் நாட்டின் மொழியும் ஆங்கில அறிவும் தேவைப்படுகிறது. எனவே தேவைக்காக இவர்கள் தாய்மொழியை மறந்தால் தாய்மொழியும் தமிழ்ப் பண்பாடும் இவர்கள் இல்லங்களை விட்டு ஓடிவிடும்.

USA Tamils - TD

ஆகவேதான் "வீட்டு மொழி தமிழ், பேச்சு மொழி தமிழ்" என்ற இலட்சியம் வலிமை பெறுகிறது. அப்படி தமிழ் பேசும் போது 'தமிழ்' குடும்ப உறுப்பினர்களை இணைக்கிறது. அந்நாட்டில் வாழும் தமிழ்க் குடும்பங்களை இணைக்கிறது. வெளிநாட்டுத் தமிழ், தமிழர்களை அவர்களின் பூர்வீக மண்ணான தமிழ்நாட்டுடன் இணைக்கிறது. உலகவாழ் தமிழர்களை ஒன்றாக இணைக்கிறது. மொழி....மொழி இயக்கம் மூலம் உலகத்தமிழர்கள் ஒன்றுபடுவார்கள்.

தாய்மொழிக்கு ஒரு சிறப்பு உண்டு.  அது புறப்படும் இடம் தமிழ் இதயம். சேருமிடம் மற்றவர்கள் இதயம். ஆனால் வேற்று மொழிகளில் பேசும் போது அது பெரும்பாலும் பிறக்கும் இடம் மனதே. அதனால்தான் அது மற்றவர்களின் காதுகளை மட்டுமே சென்றடைகிறது. தாய்மொழியோ இதயத்திலிருந்து ஊற்றாக எழுகிறது. இதயத்தைச் சென்றடைவதில்லை. உதட்டு மொழியல்ல தமிழ்.  நுனி நாக்கு மொழியல்ல தமிழ். அது உணர்ச்சி மிக்க உயிர்மொழி. உயிரோட்டமுள்ள உன்னதமொழி.

 

 

 
Powered by FFMedias