"எளிய தமிழ் ஏற்றத் தமிழ்" "இயல்புத் தமிழே இயக்கும் தமிழ்"
ஆல்டஸ் ஹக்ஸ்லி கூறினார், "ஒரு மொழியின் பொறுப்புகள் இருவகை; உணர்வை வெளிப்படுத்துவது, தகவல் தருவது".
மொழி என்பது ஒரு மனிதனில் உள்ளக்கருத்தை வெளியிடப் பயன்படும் கட்டுப்பாடமைந்த ஒலி வடிவிலான வரி வடிவம். அம்மொழி நிறைந்த இலக்கிய இலக்கணங்களோடு அமைந்திருப்பின், அது செம்மொழியாகத் திகழ்கிறது. அவ்வகையில் நமக்கெல்லாம் பெருமையாக இருக்கிறது.
மொழியின் பயனே தகவல் பரிமாற்றம் ஆகும். நாள்தோறும் நாம் பேசுகிறோம். அல்லது கேட்கிறோம், உரையாடுகிறோம். ஒருவரை ஒரு பணியைச் செய்ய வைக்க, சிந்திக்க வைக்க, செயலில் இயக்க, உற்சாகப்படுத்த, உத்வேகம் தர, ஊக்கம் அளிக்க நாம் மொழியைப் பயன்படுத்துகிறோம். அப்பொழுது நாம் மற்றவர்களுக்குப் புரியாத, புழக்கத்தில் இல்லாத வார்த்தைகளில் பேசினால், நாம் கூறும் செய்தி கேட்பவரைச் சென்று அடையாது. நாம் நம் இலக்கை அடைய முடியாது. அதனால் நாம் எதிர்பார்ப்பது நடக்காமல் போய்விடலாம். அல்லது கேட்பவர் நாம் கூறியதைத் தவறாகப் புரிந்து கொண்டு செய்ய வேண்டாததைத் தவறாகச் செய்துவிடலாம். செய்ய வேண்டியதைச் செய்யத் தவறிவிடலாம். கருத்து வேறுபாடு வரலாம். கருத்து மோதல் கூட உருவாகலாம். ஆகவே அனைவருக்கும் புரியக்கூடிய புழக்கத்திலிருக்கும், வழக்கிலிருக்கும் வார்த்தைகளைக் கொண்டதாகவே நம் "பேச்சு மொழி" இருக்க வேண்டும். மொழி, "மொழி" இயக்கம் தமிழர்களைப் பழகு தமிழில், புரியும் தமிழில், எளிமைத் தமிழில் பேச உற்சாகப்படுத்தும், வழிகாட்டும். தகவல் பரிமாற்றத்தில் தலைச்சிறந்து திகழ வைக்கும். தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை தமிழ் மூலமே உயர்த்தும்.
நான் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் ஒருவர் மிகவும் உயர்ந்த ஆங்கிலத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அருகே இருந்த நண்பர் உற்சாகம் அடைந்து கைதட்டினார். ஏனென்று கேட்டேன், அவர் கூறினார், "இந்தப் பேச்சாளர் எப்படிப் பேசுகிறார்! ஆங்கில மொழியில் மிகச்சிறந்த கருத்துக்களைக் கூறினார். வெள்ளைக்காரனே தோற்றுப் போய்விடுவான் இவரிடம்" என்றார். நான் நண்பரைப் பார்த்துக் கேட்டேன், "இவர் பேசியதில் எவ்வளவு உங்களுக்குப் புரிந்தது" என்று, "பாதிதான்" என்றார் நண்பர். பேசியவரின் ஆங்கில மொழி வளத்தால் யாருக்கு என்ன பயன். பேசுவது என்பது கருத்துகளைப் புரியும்படி சொல்வதற்காகவா அல்லது "பார் என் பிற மொழி அறிவை" என்று காட்டிக் கொள்வதற்காகவா? இது, தமிழ்மொழிப், பேச்சாளர்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. அரங்கிலிருப்போரின் தமிழறிவைப் பொருத்ததுதான் "இலக்கியத் தமிழால் பேசுவதா?" "எளிய தமிழில் பேசுவதா?" என்று பேச்சாளர்தான் முடிவு செய்ய வேண்டும். பேச்சாளரிடம் சமுதாயத்தைச் சீர்திருத்தும் நல்ல கருத்துக்கள் இருந்தால் தமிழறிந்தோர் மத்தியில் அவர் எளிய தமிழிலேயே பேச வேண்டும். மொழி அறிவைக் காட்டிக் கொள்வதைவிட கேட்பவரின் புரியும் திறன் அறிந்தே பேச்சு இருக்க வேண்டும். தங்களை அறிவு ஜீவி என்று காட்டிக் கொள்வதைவிட, அவரது பேச்சு கேட்பவரை "அறிவு ஜீவி" மற்றும் "உழைப்பு ஜீவி"யாக மாற்றுவதாக இருக்க வேண்டும்.
இலக்கணத் தமிழ், இலக்கியத் தமிழ் ஆகியவற்றை நாம் பாமார மக்கள் மீது திணிக்கக் கூடாது. திணித்தால் அவர்கள் மொழியை விட்டு விலகிச் செல்ல நேரிடலாம். நாளடைவில் அவர்களுடைய தமிழ்க் காதல் அதிகரிக்கும் போது அவர்களின் மொழி வளம் தானாகவே கூடும். அதே போன்றுதான் பிற மொழிச் சொற்கள், தமிழில் ஊடுருவியிருந்தால் அதை அகற்ற நாம் உடனடி முயற்சிகள் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. இது பாமர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கூறப்படும் ஒரு யோசனை. ஒருவர் தூய தமிழிலேயே பேச வேண்டும் என்பார். சங்ககாலத் தமிழிலும் பேசுவார். எதையாவது கூறிவிட்டு, "புரிகிறதா" என்று கேட்பார். "புரியவில்லை" என்றால் உடனடியாக இன்றைய நடைமுறைத் தமிழில்தான் கூறியது என்ன என்று கூறுவார், விளக்குவார். இது தேவைதானா?. அவரே "மொழிக்குள் மொழி மாற்றம்" (Translation of the same laungues) செய்வர்
வில்லியம் பட்லா என்ற ஒரு அறிஞர் கூறினார், "ஒரு சிறந்த அறிவாளிகளைப் போல் சிந்தி. ஆனால் மக்களுக்குப் புரியும் மொழியில் சொல்".
தேவை பழகு தமிழ். சந்தேகமில்லாமல் எளிய தமிழே ஏற்றத் தமிழ். இயல்பு தமிழே அனைவரையும் இயக்கும் தமிழ். பிறமொழி வார்த்தைகள் கலந்து பேசப்படும் தமிழை மணிபிரவாளத் தமிழ் என்பார்கள், அது தவறில்லை.
"சிறப்பாகச் சொல்கிறார்" என்று பெயர் வாங்குவதைவிட இவர் சொல்வதைக் கேட்டால், "சிறப்பாகச் செயல்பட முடியும்" என்று, கேட்பவர் நினைக்கும் வகையில் நாம் தமிழில் சொல்ல வேண்டும்.
|