உலகத்தின் மாசுவின் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை சரி செய்ய எக்ஸ்னோரா அமைப்பையும், நாட்டின் மாசுவான இலஞ்சத்தை ஒழிக்க ஐந்தாவது தூண் அமைப்பையும் உருவாக்கிய M B நிர்மல் அவர்கள் தமிழ்மொழிக்கு ஏற்படும் மாசுகளை அகற்ற மற்றும் மொழியை பாதுகாக்க மொழி மொழி என்ற அமைப்பையும் உருவாக்கி உள்ளார்.

 

மொழிச் சேவை மூன்று பண்புத் தமிழ், நன்று தமிழ்

வான்புகழ் வள்ளுவர் கூறினார், "இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று" என்று. (குறள் 100)

இன்னொரு முறை அவரே கூறினார், "மொழியே, மனிதனைக் குறிக்கும்; கொச்சைத் தன்மை, கொச்சைப் பேச்சிலும், பண்பட்ட தன்மை, பண்பட்ட பேச்சிலும் வெளிப்படுவது இயல்பு."

தமிழ்மொழியில் அழகிய அன்பான பண்பட்ட வார்த்தைகளுக்குப் பஞ்சமில்லை. பண்பட்ட தமிழில் பேசுபவர்கள், பண்பட்ட தமிழர்கள்; கொச்சைத் தமிழில் பேசுபவர்கள், கொச்சைத் தமிழர்கள்.

வான்புகழ் வள்ளுவர் கூறினார், "இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று" என்று. (குறள் 100)

ஸேம்யல் ஜான்ஸன் கூறினார், "சிந்தனையின் ஆடை, மொழி".

நாம் நம்முடைய குழந்தையை வெளியே அனுப்பும் போது, தூய உடையை அணிவித்து, தலைவாரி, பொட்டு வைத்து அனுப்புகிறோம். அதே போன்றுதான் நம் சிந்தனைகளும். அவைகளை வார்த்தைகளாக வெளியே அனுப்பும் போது, அவை இனிமையானவையாக, பண்பும், பொருளும் நிறைந்ததாக இருக்க வேண்டும். நாம் சொல்லும் சொல்லில் பயன் இருக்க வேண்டும். பயனற்ற சொற்களை எப்போதும் சொல்லக்கூடாது.

தமிழர்கள் கெட்ட வார்த்தைகளை அறவே தவிர்க்க வேண்டும். பண்பற்ற வார்த்தைகளை மறந்தும் பயன்படுத்தக் கூடாது.

தமிழ்மொழியைப் பொறுத்தவரை இம்மொழியிலேயே பலமொழிகள் உண்டு. ஊருக்கு ஊர் மொழி மாறுபடும், இடத்திற்கு இடம் வேறுபடும். ஆனால் தமிழின் இனிமை எங்கும் குறையாது, மங்காது.

தமிழ்மொழியைப் பொறுத்தவரை இம்மொழியிலேயே பலமொழிகள் உண்டு. ஊருக்கு ஊர் மொழி மாறுபடும், இடத்திற்கு இடம் வேறுபடும். ஆனால் தமிழின் இனிமை எங்கும் குறையாது, மங்காது.

தமிழ்

 • மதுரையில் மதுரமாக ஒலிக்கிறது.
 • நெல்லையில் நெறியோடு பேசப்படுகிறது.
 • திருச்சியில் தித்திக்கிறது.
 • சிவகங்கையில் சிறப்படைகிறது
 • தஞ்சையில் வாஞ்சையுடன் தூயதமிழ் பேசப்படுகிறது.
 • திருவண்ணாமலையில் திட்பம் பெறுகிறது.
 • தரும்புரியில் தரத்துடன் பேசப்படுகிறது.
 • திருவள்ளூரில் திரட்டுப் பாலாகிறது.
 • கடலூரில் கல்கண்டாக இருக்கிறது.
 • காஞ்சியில் வாஞ்சையுடன் பேசப்படுகிறது.
 • விழுப்புரம் தமிழில் கிராமிய மணம் வீசுகிறது.
 • ஈரோட்டில் ஈர்க்கிறது.
 • புதுக்கோட்டையில் புத்துணர்வு பெறுகிறது.
 • விருதுநகரில் வியாபாரிகளின் விந்தை மொழியாகிறது.
 • வேலூரில் வெல்லமாகிறது.
 • பெரம்பலூரில் பேரின்பமாகிறது.
 • கடைக்கோடி கன்னியாகுமாரியில் கன்னித் தமிழாகிறது.
 • தேனியில் தேனாகிறது.
 • கோவையில் கொஞ்சு தமிழ் கொஞ்சுகிறது.
 • திருவாரூரில் திண்ணம் பெறுகிறது.
 • தூத்துக்குடியில் தூய்மை பெறுகிறது.
 • சிங்கப்பூரில் சிங்கார மொழியாகிறது.
 • மலேசியாவில் மாண்பு பெறுகிறது.
 • நாகையில் நாதமாகிறது.
 • நாமக்கல்லில் நய மொழியாகிறது.
 • நீலகிரியில் நிமிருகிறது.

கொங்கு நாட்டில் தமிழ் பண்பு மொழியாகிறது, மரியாதை மொழியாகிறது.

இலங்கைத் தமிழோ இலக்கணத் தமிழாய் இனிக்கிறது. யாழ் தமிழ் யாழ் இசைப்பது போன்றிருக்கிறது.

தாயின் உதட்டிலிருந்து உதிக்கும் பொழுது தமிழ் அன்பு மொழியாகிறது.

ஊருக்கு ஊர் தமிழ் பேச்சு மாறுபடுகிறது. வெவ்வேறு மணம் வீசுகிறது. தங்களுக்கே உரிய தனித்தமிழை மாறாமல் பாதுகாப்பது என்பது அவ்வூர் மக்களையே சாரும். தமிழைக் காப்பது போல் ஒவ்வொரு ஊரின் "தனித்தமிழை" அதன் தனித்தன்மையைப் பேணிக்காப்பதும் அவசியம்.

ஒருமுறை கோயம்புத்தூருக்குச் சென்று, ஒருவரிடம் வழி கேட்டேன். நீங்கங்க, இடது பக்கங்க, திரும்புங்க, அங்கே போனிங்கனா, மூன்றாவது கட்டிடம் ஒன்று வரும் பாருங்க, அதில் இரண்டாவது மாடியிலங்க நீங்க கேட்கிற அலுவலகம் இருக்கிறதுங்க" என்றாரே பார்க்கலாம். எத்தனைப் பண்புமிக்க வழிகாட்டுதல் பாருங்கள். நமக்குக் கிடைப்பது செல்ல வழிமட்டுமல்ல. மகிழ்ச்சியுங்கூட. ஆனால் சில நகரங்களில் தமிழ் ஏனோ நரகத் தமிழாகிறது. மொழி சேதமடைகிறது, சிதிலமடைகிறது, கேள்விக்குறியாகிறது. தமிழ் நாட்டின் தலைநகரமான அறுபது லட்சம் தமிழர்கள் வாழும் சென்னையில் தமிழ் தடுமாறுகிறது, சறுக்குகிறது, சேறாகிறது. சென்னையில் அனைவரும் அப்படி மொழியைச் சேதப்படுத்தவில்லை. பாதிக்குப் பாதி பேர் மொழியை நன்றாக சிறப்பாகப் பயன்படுத்துகிறார்கள். மீதி பாதிப் பேர் மொழியைப் பொறுத்தவரையில் வழுக்கிவிடுகிறார்கள். ஆகவேதான், இந்த மூன்றாவது முக்கிய நடவடிக்கை மற்றும் மொழிச் சேவை தேவைப்படுகிறது. சென்னை வாசிகளே! கோபப்படாதீங்க. நானும் சென்னைக்கு அருகே பிறந்து, சென்னையில் வளர்ந்து, வாழ்ந்து வருபவன். உங்களை நான் குறை கூறவில்லை. இங்கிருக்கும் மொழியைக் குலைப்பவர்களைப் பற்றித்தான் குறிப்பிடுகிறேன். வருத்தப்பட வேண்டியது அவர்களே.

மொழி, "மொழி" இயக்கம், பண்பு வார்த்தைகளையும், அன்பு வார்த்தைகளையும் பயன்படுத்த தமிழ்மொழி பேசுபவர்களுக்கு ஊக்கம் தரும். குறிப்பாக தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையின் பல இடங்களில் ஒலிக்கும் "சென்னைத் தமிழை" "உண்மைத் தமிழாக" மாற்ற இந்த இயக்கம் ஓயாது உழைக்கும்.

அயராது கடும் பணியாற்றும் "தலைநகர் தமிழைத் தலை நிமிர்ந்த தமிழாக்கும்".

இன்று தலைநகரத்தின் சில இடங்களில் தமிழின் தரம் குறைந்து இருக்கிறது. இங்கு கொச்சை வார்த்தைகளுக்குப் பஞ்சமில்லை. கலப்பட வார்த்தைகள் கணக்கிலடங்கா. மாசுபட்ட தமிழைச் சொல்லி மாளாது. உதாரணமாக ஜபதர்ஸ், பேஜாரு, ஷோக்கு, சால்ஜாப்பு, பொறம்போக்கு, மச்சி, நாஸ்த்தி போன்ற வார்த்தைகள் ஏராளம்.....ஏராளம். வேறு ஏதாவது ஊர் என்றால் போனால் போகட்டும் என்று விட்டுவிடலாம். இது தமிழ்நாட்டின் தலைநகரமாயிற்றே. தமிழ் மொழி ஆட்சி செய்யும் இடமாயிற்றே. எப்படி இப்படியே விட்டுவிடுவது. திரைப்படத் தயாரிப்புகள், தொலைக்காட்சி நிறுவனங்கள், பத்திரிக்கைகள் போன்ற சக்தி வாய்ந்த சாதனங்கள் இதே தமிழ்நாட்டின் தலைநகரில் இருந்து செயல்படுகின்றன. இவர்கள் சேவை பாராட்டுக்குரியது. உலகவாழ் தமிழர்கள் ஒன்றுபடுத்தும் பணியில் இவர்கள் வெற்றிக் கண்டுள்ளார்கள். இச்சாதனங்களால் "தமிழ்" புரிந்து கொள்ளும் மொழியாக, தமிழை மறந்த பல தமிழர்களுக்கு உதவி வருகின்றன.

அதே நேரத்தில், இச்சாதனங்களில் தோன்றும் ஒரு சிலரின் தமிழ்மொழிப் "பற்று?" காரணமாக, இந்த சற்றும் சரியில்லாத வார்த்தைகள் இங்கிருந்து நோய்க்கிருமிகள் போல் தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதும் பரவி, மொழியின் அழிவை மற்ற ஊர்களிலும் பரப்பிவிடுகின்றன. ஆகவேதான் இந்நடவடிக்கையைப் பொறுத்தவரை மிக முக்கிய கவனம் தேவை. ஆனால் ஒரு சில தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் நல்ல தமிழில் அழகாக சுவையாகப் பேசுவார்கள். ஆனால் திடீரென்று, கொச்சைத் தமிழில் குப்புற விழுந்துவிடுவார்கள். செய்தி மற்றும் பொழுதுபோக்கு சாதனைகள் பெரும்பான்மையான நேரத்தில் நல்ல தமிழில் நிகழ்ச்சிகளை நடத்தினாலும், ஒரு சில சமயங்களில் இடறிவிடுகிறார்கள். ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் போன்று, ஒரு சிலர் தமிழைச் சிதைப்பதை வாடிக்கையாக்கிக் கொண்டுள்ளார்கள். அந்நிலை மாறியாக வேண்டும், அல்லது நாம் மாற்றியாக வேண்டும். ஒரு வியாபார வானொலியில் தமிழைக் குதறுவதற்கென்றே அவதாரம் எடுத்தது போல் ஓரிருவர் பேசுகிறார்கள். இதை உடனடியாக அவர்கள் நிறுத்த வேண்டும்.

தமிழை அழுக்கு மொழியாக விடமாட்டோம். நம் மொழி பிறப்பிலேயே அழகு மொழிதான் அதை அப்படியே விட்டுவிட்டாலே போதும்.

"செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே" என்றார் பாரதியார். தமிழைக் கேட்கும் போது, தேள் கொட்டுவது போல் இருக்கக் கூடாது, ஈயத்தைக் காய்ச்சிக் காதில் ஊற்றுவதாக இருக்கவே கூடாது. அது கேட்பதற்கு இனிமையானதாக இருக்க வேண்டும்.

 

 
Powered by FFMedias