உலகத்தின் மாசுவின் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை சரி செய்ய எக்ஸ்னோரா அமைப்பையும், நாட்டின் மாசுவான இலஞ்சத்தை ஒழிக்க ஐந்தாவது தூண் அமைப்பையும் உருவாக்கிய M B நிர்மல் அவர்கள் தமிழ்மொழிக்கு ஏற்படும் மாசுகளை அகற்ற மற்றும் மொழியை பாதுகாக்க மொழி மொழி என்ற அமைப்பையும் உருவாக்கி உள்ளார்.

 

மற்ற மொழி இனத்தவர்களிடையே ஒற்றுமை

பிரிவினைக்கு முன் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நாடாக இருந்த பொழுது, சிந்து மாநிலத்தில் வாழ்ந்தவர்களைச் சிந்திகள் என்று அழைக்கிறோம். இவர்களெல்லாம் சிந்து மாநிலத்தில் விவசாயம் செய்து வந்தார்கள். நாடு இந்தியா - பாகிஸ்தான் என்று இரண்டாகப் பிளந்த பொழுது சிந்து மாநிலம் பாகிஸ்தானின் எல்லைக்கு உட்பட்ட பகுதியானது. இந்து மதத்தைச் சார்ந்த சிந்திகள் அங்கிருந்து வெளியேறினார்கள் அல்லது வெளியேற்றப்பட்டார்கள். தங்களுடைய சொத்துக்களையும், உடைமைகளையும் ஒரே நாளில் இழந்து அகதிகளாக இந்தியா வந்தார்கள். ஒரு மரத்தை வேரோடு பிடுங்கி எறிந்தது போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். விவசாயத் தொழிலையே செய்து வந்த அவர்களுக்கு, விவசாயம் செய்ய நிலமில்லாமல் போய்விட்டது. அதனால் விவசாயம் செய்ய முடியவில்லை. வியாபாரத்தில் இறங்கினார்கள். வியாபாரிகளாக மாறினார்கள்.

உள்ளூரில் வியாபாரம் செய்யத் தொடங்கினார்கள். பிறகு வெளிநாடுகளுடன் வியாபாரம் செய்ய ஆரம்பித்தார்கள். அதைத் தொடர்ந்து வெளிநாடுகளில் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தினார்கள். அதாவது கிளைகளைத் துவக்கினார்கள். கடைசியாக வெளிநாடுகளுக்கே சென்று வியாபாரம் செய்யத் துவங்கினார்கள். இங்கிலாந்து, கனடா, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, தென்னாப்பிரிக்கா என்று பல நாடுகளுக்கு குடிபெயர்ந்தார்கள். இன்று உலக நாடுகளில் வியாபாரத்தில் முதலிடத்தில் இருக்கும் ஒரு சில இனங்களில் சிந்தி இனமும் ஒன்று. அறுபது லட்சம் ஹாங்காங் மக்கள் தொகையில் சிந்திகள் பத்தாயிரம் பேர் மட்டுமே. ஆனால், ஹாங்காங் ஏற்றுமதி, இறக்குமதியில் கிட்டத்தட்ட எட்டு சதவீதம் இவர்கள் கைகளில்.

நான் ஹாங்காங் நகரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையின் தலைமை மேலாளராகப் பணியாற்றியவன் என்ற முறையில் என்னை வியக்க வைத்தவர்கள் சிந்தி மொழி இனத்தினர். எனக்கு ஏராளமான சிந்தி மொழி நண்பர்கள் உண்டு. அவர்களின் வெற்றி என்ன என்பதை அவர்களிடமே நான் கேட்டறிவேன். அவர்கள் சொன்னவைகளில் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கீழே விழுந்து உண்டான காயம் அவர்களை வீறு கொண்டு எழச் செய்தது. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வந்து, பல நாடுகளில் குடியேறிய சிந்தி மொழியினர் கடைப்பிடித்த முக்கியக் கொள்கை என்னவென்றால், ஒரு நாட்டில் வியாபாரம் செய்யும் சிந்தி வேறு நாட்டில் வியாபாரம் செய்ய நினைக்கும் போது அதை அந்த நாட்டில் வசிக்கும் சிந்தியோடுதான் பெரும்பாலும் செய்வார். அது அவர்களுக்கு எளிதாக இருந்தது. அதே நேரத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க வேண்டும், ஒருவரை ஒருவர் உயர்த்திவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். பொருளை விற்பவர் அதை வாங்கி விற்பவர் இருவருக்குமே இலாபம் (கமிஷன்) கிடைக்கும். அவ்வகை இலாபம் பெறும் இருவருமே சிந்தியாக இருக்குமாறு பார்த்துக் கொள்வார்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால் இவர்கள் வளர்ச்சிக்கு இரண்டு காரணங்கள். இந்த இனம் சந்தித்த பேரிழப்பு மற்றும் பிரச்சினைகள். அப்பிரச்சினைகளையே பரிசுகளாக்கினார்கள். இவர்களுடைய இன உணர்வு இவர்களைப் பாதுகாத்து, பன்மடங்கு உயர்த்தியது.

அடுத்ததாக, இராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த இராஜஸ்தானி மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்த இராஜஸ்தானியர்கள் ஜெயின் மதத்தினர். இளைஞனாக இருந்த போது, நான் நேரில் பார்த்த நிகழ்ச்சி. தொழிலில் கொடிகட்டிப் பறந்த ஒரு மார்வாடி, நஷ்டம் ஏற்பட்டு வியாபாரத்தில் அனைத்தையும் இழந்துவிட்டார். நொடித்துப் போய்விட்டார். மற்ற மார்வாடி நண்பர்கள் அவரைப் புதிய தொழில் ஒன்றைத் துவக்க உற்சாகப்படுத்தினார்கள். அந்தப் புதிய தொழிலை அவர் துவக்கிய போது அங்கு வந்திருந்த நண்பர்களும், உறவினர்களும், அவருக்கு சிறு தொகையைப் பரிசாக அளித்தனர். அந்தப் பணமே மீண்டும் வியாபாரத்தைத் துவங்க போதுமானதாக இருந்தது. இப்படி நடைபெறுவது அவர்களிடையே மிக சர்வ சாதாரணம். ஒரு காப்பீட்டுக் கழகத்தைவிடப் பாதுகாப்பானது இவர்களின் இன உணர்வு மற்றும் மொழி இன உணர்வு.

இதே போன்றுதான் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ள தமிழ் உள்ளங்கள் முன்வர வேண்டும். நம் நாட்டினைப் பற்றிக் கூறும் பொழுது நண்டு கதை ஒன்றைக் கூறுவார்கள். ஒரு இந்திய நண்டு புட்டியிலிருந்து தப்பிக்க முயலும் போது உள்ளே இருக்கும் மற்ற இந்திய நண்டுகள் அதைத் தப்பிக்கவிடாமல் இழுத்துவிடுமாம். மோசமான இக்கதையில் எனக்கு உடன்பாடில்லை. தமிழ் உள்ளங்களைப் பொறுத்தவரை புட்டியிலுள்ள எல்லா தமிழக நண்டுகளும் ஒன்றாகச் சேர்ந்து ஒவ்வொன்றாகப் புட்டியில் இருந்து வெளியே மற்றும் முன்னேற உதவிக் கொள்ள வேண்டும். தோள் கொடுக்க வேண்டும். இது இனம் மற்றும் மொழியுணர்வால் ஏற்பட வேண்டும்.

 

 

 
Powered by FFMedias