உலகத்தின் மாசுவின் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை சரி செய்ய எக்ஸ்னோரா அமைப்பையும், நாட்டின் மாசுவான இலஞ்சத்தை ஒழிக்க ஐந்தாவது தூண் அமைப்பையும் உருவாக்கிய M B நிர்மல் அவர்கள் தமிழ்மொழிக்கு ஏற்படும் மாசுகளை அகற்ற மற்றும் மொழியை பாதுகாக்க மொழி மொழி என்ற அமைப்பையும் உருவாக்கி உள்ளார்.

 

எளிமைக்கு ஏற்றம் தருவோம்

எளிமையை எடுத்துச் சொன்ன திரைப்படம்

உலகத்திலேயே திரைப்படத்தின் மூலம் சமுதாயத்திற்கு வேண்டிய கருத்துகளைச் சிந்தனையைத் தூண்டும் வகையில் சிரிப்பையும் கலந்து சிறப்பாகத் தந்தவர் யார் என்றால் அவர்தான் அற்புதமான மூளைக்குச் சொந்தக்காரரான "இயக்குநர் சிகரம்" திரு.கே.பாலசந்தர் அவர்கள். படங்களை வியாபாரத்திற்காக மட்டுமல்லாமல், சிந்தனையைத் தூண்டும் கருத்துகளையும் மக்களிடம் சேர்க்கவும் படம் எடுப்பவர். சமுதாயப் பிரச்சினைகளைப் பற்றி விழிப்புணர்வு உண்டாக்கும். கதைகளைப் படமாகத் தயாரித்து இயக்கி வெளியிடுபவர்.

ஆடம்பர வாழ்க்கை அழிவில் கொண்டு சேர்க்கும் என்பதை அவர் மிக அழகாக "பாமா விஜயம்" படத்தின் மூலம் சொல்லி நம்மைச் சிரிக்க வைத்து, சிந்திக்கவும் வைத்தார். ஆடம்பரத்தின் தீய விளைவுகளைச் செவ்வனே சொல்லியிருந்தார். பக்கத்து வீட்டில் புதிதாகக் குடிவரும் ஒரு நடிகைக்காக நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த மூன்று பெண்கள் எப்படி நிலை தடுமாறி, பணக்காரர்கள் போன்று போலியாக வாழ்ந்து அவதிக்குள்ளாகிறார்கள் என்பதை அந்தப் படம் இயற்கையாகச் சித்தரித்துக் காட்டியது. "வரவு எட்டணா, செலவு பத்தணா" என்ற பாடலை எவரும் மறக்க முடியாது.

எளிமை என்ற சொல்லுக்கு பல பொருளுண்டு. எளிமைதான் எத்தனை வகை? பொருள் எளிமை, நடத்தை எளிமை, செயல்முறை எளிமை, மொழி எளிமை, உணவு எளிமை என்று பலவகை எளிமைகள் இருக்கின்றன.

பொருள் எளிமை (Material Simplicity) : ஒருவர் பெரும் கோடீஸ்வரராக இருப்பார். ஆனால் தன்னுடைய செல்வப் பகட்டை வெளிப்படுத்தவில்லையென்றால் அவர் பொருள் எளிமைக்குச் சொந்தக்காரர். அவர் சாதாரண தட்டில்தான் சாப்பிடுவார். அவருக்குத் தெரியும் வெள்ளித் தட்டில் சாப்பிட்டாலும், சாதாரணத் தட்டில் சாப்பிட்டாலும் உண்பது உணவைத்தானே தவிர, தட்டையல்ல. அவர் உடையிலும் எளிமை தெரியும். பயன்படுத்தும் பொருட்களிலும் எளிமைத் தெரியும். எளிமையை ஒரு வாழ்க்கையின் இலட்சியமாகக் கடைப்பிடிக்க இந்த வாழ்க்கையின் வழிமுறையைக் கடைபிடிக்க இலட்சிய எளிமை ((Principled Simplicity) என்று ஒரு இயக்கமே நடத்தி வருகிறோம். (www.principledsimplicity.org)

நடத்தையில் எளிமை (Behavioural Simplicity): நடத்தை எளிமை என்பது எவரிடமும் எளிமையாகப் பழகுவது, சாதாரண மனிதராக சமுதாயத்தில் கருதப்படுபவரையும், தன்னுடன் பழக அனுமதிப்பளிப்பது. பாகுபாடு இன்றி அனைவரையும் அன்புடன் மரியாதையுடன் நடத்துவது, எப்போதும், எங்கேயும் பொறுமை காட்டுவது.

செயல்முறையில் எளிமை (Procedural Simplicity) : செயல்முறை எளிமை என்பது தன் அலுவலகத்திலும் மற்றும் எந்தச் செயலிலும் எளிமையைக் கடைப்பிடிப்பது, செயல்திட்டங்களை எளிமைப்படுத்துவது. எதையும், எவரும் எளிதாகப் புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் தகவல்களைத் தருவது. சட்டங்கள் மற்றும் நியதிகளை எளிமையாக்குவது. எந்தச் செயலைச் செய்தாலும் அவற்றை எளிய முறையில் செய்தல்.

உணவில் எளிமை (Food Simplicity) : உடலும் உள்ளமும் நலம் பெறுவகையிலான எளிய உணவினை உண்ணுதல். நான்கு அங்குல நாக்கின் சுவை பசிக்காக ஆறடி உடலைப் பாழடிக்காமல் எளிமை உணவு உண்பது.

மொழியில் எளிமை ((Dress Simplicity): கடைசியாக ஆனால் மிக முக்கியமாக மொழியில் எளிமை கடைபிடிப்பது மொழி எளிமை என்பது நாம் பேசும் அல்லது எழுதும் வார்த்தைகள் அனைத்தும், அனைவருக்கும் குறிப்பாக அந்த தகவல்களைப் பெறுபவர்களில் மிக சாதாரண அறிவுடைய மனிதர்களும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் எளிமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவது.

நான் கல்லூரியில் படித்த பொழுது பல பாடங்களுக்கு நான் நூல்கள் வாங்கும் போது கூடிய வரை இங்கிலாந்து நாட்டு பாட ஆசிரியர்கள் எழுதிய நூல்களையே வாங்குவேன். இந்திய நூலாசிரியர்கள் புத்தகங்களைப் பெரும்பாலும் தவிர்ப்பேன். இதற்குக் காரணம் என்னவென்றால் மேல் நாட்டவர்கள் எழுதிய ஆங்கில நூல்கள் மிக எளிமையாக எழுதப்பட்டிருக்கும். நம் நாட்டுப் பாடப் புத்தகத்தில் ஆங்கிலம் சற்றுக் கடினமாக இருக்கும். இதில் வேடிக்கை என்னவென்றால் இந்நூல்களை எழுதிய மேல்நாட்டு ஆசிரியர்களுக்கு ஆங்கிலம் தாய்மொழி. நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். வெள்ளைக்காரர்களை விட நம் ஊர்க்காரர்களுக்கு ஆங்கிலப் புலமை அதிகம் என்று கருதுவேன்.

இக்கருத்தினை என்னுடைய ஆசிரியர் ஒருவரிடம் கேட்ட பொழுது அவர் கூறியது இன்றும் நினைவில் இருக்கிறது. "பாடப் புத்தகங்கங்கள் எழுதுவது எதற்கு? அப்பாடத்தைப் படிக்கும் மாணவன் புரிந்து கொள்ளத்தானே. எழுதப்படும் ஒவ்வொரு வரியும், பாடத்தை எடுத்துச் செல்லும் ஊர்திகள்" என்று சொன்னார். நாம் அனைவரும் சாதிக்க விரும்புகிறோம். மற்றவர்கள் ஏதாவது ஒரு காரியம் செய்ய வேண்டும் என்று விழைகிறோம். ஒரு தவறு செய்பவனைக்கூட திருத்த முயல்கிறோம். நம்முடைய நோக்கம் திருத்த வேண்டுமென்றால் நாம் கூறுவது எளிதாக இருக்க வேண்டும். அவனுக்குப் புரியும் வகையில் இருக்க வேண்டும். அப்போதுதான் நம் எண்ணங்கள் கேட்பவரைச் சென்றடைய வைக்கும். நம் எண்ணங்களுக்கு ஏற்றவாறு அவனைச் செயல்பட வைக்கும்.

 

 

 
Powered by FFMedias